மூன்று ஆண்டு போராட்டத்துக்குப் பின் பாஸ்போர்ட் பெற்ற மெஹபூபா முப்தி!
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹ்பூபா முப்திக்கு 3 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பின் 10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்த பாஸ்போர்ட் பணச்சீட்டு 2019 ஆம் ஆண்டு காலாவதியானது. இதைத் தொடர்ந்து பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறு அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் சட்டப்போரட்டத்துக்குப் பிறகு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்னதாக கடைசியாக அவர்தான் முதல்வராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறு மெஹபூபா முப்தி கோரியிருந்தார். ஆனால், நீண்டகாலமாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாஸ்போர்ட் வழங்கும் துறை அதிகாரிகள் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இந்த நிலையில் தமது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறும் அல்லது புதிய பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிடக்கோரி மெஹ்பூபா, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தாம் பலமுறை நினைவுபடுத்தியும் இது விஷயத்தில் பாஸ்போர்ட் அதிகாரி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக அவர் மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிதிபா எம்.சிங், மெஹ்பூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்குமாறு பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடயே மெஹ்பூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மார்ச் 2 ஆம் தேதியே ஜம்மு காஷ்மீர் பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மெஹ்பூபாவுக்கு ஜூன் 1 2023 முதல் மே 31, 2033 வரை பத்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பாஸ்போர்ட் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகவும் இதனால், தனது 80 வயது தாயாரை மெக்காவுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்ல முடியவில்லை என்றும். இதுவிஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் மெஹபூபா கோரிக்கை விடுத்திருந்தார்.

