

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். அது நாளை ஜனவரி 30 ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
முன்னாள் மாடலான மெலனியா டிரம்ப், தனது கணவர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய 20 நாட்களை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளார்.. . ரூபாய் 287 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் வருகிற 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. உலக அளவில் 5000 திரையரங்குகளிலும், அமெரிக்காவில் 2000 திரையரங்குகளிலும் திரையிடப்பட போகிறது. அதற்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடுவதற்கு மெலனியா ஏற்பாடு செய்திருந்தார். அதில் டிரம்ப், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
'மெலனியா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் ஆவணபடத்தில் பதவியேற்பு விழாவிற்கான விரிவான திட்டமிடல்கள், வெள்ளை மாளிகைக்குக் குடிபெயர்ந்த போது ஏற்பட்ட மாற்றங்கள், குடும்ப உறுப்பினர்களுடனான மெலனியாவின் தனிப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்கள், அமெரிக்காவின் மிகச் சக்திவாய்ந்த பெண்மணியாக அவர் மீண்டும் உருவெடுத்த பயணம் ஆகியவை இடம்பெற்றுள்ளன
திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பு இந்த மெலனியா ஆவணப்படம், அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காக அந்த நிறுவனம் ரூபாய் 330 கோடி கொடுத்து அதனுடைய உரிமையை பெற்றுள்ளது. இதுவரை யாரும் ஒரு ஆவணப்படத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததில்லை. இதுவே ஆவணப்படத்திற்காக செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.