பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய செவர்லெட் காருடன் பொதுமக்கள் உற்சாக செல்பி!

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய செவர்லெட் காருடன் பொதுமக்கள் உற்சாக செல்பி!

ம் தமிழகத்தின் பெருமைமிகு அரசியல் தலைவராக உலக அரங்கிலும் நம் மனதிலும் இடம்பிடித்த பெருந்தலைவர் காமாராஜரின் நேர்மை பற்றி அனைவரும் அறிவோம். காமராஜரின் ஆட்சி போல் என்று மீண்டும் வரும் என்ற ஏக்கத்துடன் மக்கள் இருக்கிறார்கள். இவர் தமிழக முதல்வராக இருந்தபோது பயணம் நிமித்தம் பயன்படுத்திய கார் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மக்களைக் கவர்ந்துள்ளது.

    தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாத காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, பிரபல தொழிலதிபரான டி. வி எஸ் சுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டது செவர்லட் ஸ்டைல் லைன் டீலக்ஸ் வகை கார். எம் டி டி 2727 எனும் எண் கொண்ட இந்தக் கறுப்பு நிறக் கார் 1952 ஆம் ஆண்டு காமராஜரிடம் வந்தது. முதல்வர் ஆன பின்பும் அரசு தரும் காரைப் பயன்படுத்தாமல் இந்தக் காரிலேயே பயணம் செய்தார். தமிழகம் முழுவதும் இதில்தான் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அறிந்தார். 1963ல் முதல்வர் பதவியை விடுத்து கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டபோதும் இதே காரில்தான் பயணித்தார். காமராஜர் என்றாலே அவரின் நேர்மையும் உடன் கறுப்புக் கலர் காரும் பெரும்பாலோரின் நினைவுக்கு வரும்.  

    1975ஆம் ஆண்டு அக்டோபர்  2 ல் காமராஜரின் மறைவுக்கு பிறகு அவரின் நினைவாக சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பராமரிப்பின்றி பல வருடங்கள் கடந்து பொலிவை இழந்த கார் காமராஜரின் பிறந்த நாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதியன்று புதுப்பொலிவுடன் மீண்டும் சென்னை காமராஜர் அரங்கத்தில் பார்வைக்கு வைக்க தமிழக காங்கிரசார் முடிவு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரியில் உள்ள கார் பழுதுபார்க்கும் கம்பெனிக்கு கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட இந்த கார் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

     இது குறித்து கார் பழுது பார்க்கும் கம்பெனி  உரிமையாளர் அஸ்வின் ராஜ்வர்மா என்பவர்” எனது தாத்தா முனுசாமி கவுண்டர் காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்எல்ஏவாக இருந்தவர். என் தந்தை ராஜேந்திரவர்மா தனியார் பேருந்துகள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, காமராஜர் பயன்படுத்திய காரை புதுப்பித்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி சென்னை காமராஜர் அரங்கில்  இருந்து காரை எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம். காருக்கான கண்ணாடி ரப்பர் உதிரி பாகங்கள் லைட்டுகள் ஆகியவற்றை அமெரிக்காவில் இருந்து ஆர்டர் செய்து வரவழைத்தோம். மேலும் சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்கள் கார்களை புனரமைக்கும் நிபுணர் அர்ஜுன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம். தற்போது புதுப்பொலிவுடன் உள்ள காரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள். வருகிற 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது” என்று பெருமையுடன் கூறினார்.

இந்தக் கார் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தில் இதை விலை பேசி விற்று விட முடிவு செய்த நேரத்தில் அதைக் கேள்விப்பட்ட கண்ணதாசன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காரின் விற்பனை தவிர்க்கப்பட்டு அரங்கின் பின்புறம் அதை  நிறுத்தி வைத்தனர். நாட்கள் செல்ல செல்ல ஆட்சிகள் மாறி கார் கவனிப்பின்றி போனதால் சிதிலமடைந்த காரைக் கண்ட சமூக ஆர்வலர்கள் ஒரு மாமனிதரின் நினைவாக இருக்கும் காரை பராமரிக்கக் கூட காங்கிரசாருக்கு முடிய வில்லையா எனும் கேள்வியை எழுப்ப தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களால் காருக்கு விமோசனம் ஏற்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று புதுப்பொலிவுடன் மக்களைக் கவரப் போகிறது.

    பெருமைமிகு தலைவர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருட்களை  பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com