தமிழ்நாட்டில் தலைமுடிக்கு வண்ணம் பூசும் ஷாம்புவை பெண்களை விட ஆண்கள் அதிகம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் ஹேர்கலர் ஷாம்பு விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் நரைக்கும் தலைமுடியை கருப்பாக மாற்ற அறிமுகமான ஹேர் டை எனப்படும் தலைமுடி சாயம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சியைக்கண்டு, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. குறிப்பாக, முடியை நினைத்த நிறத்திற்கு மாற்றும் தன்மைகொண்ட, ஹேர் கலரிங் ஷாம்புவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நரைமுடி உள்ளவர்கள் மட்டுமன்றி, இளைஞர்கள் இளம்பெண்களும் தங்களின் முடியை விதவிதமான வண்ணங்களில் மாற்ற ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஹேர் கலரிங் ஷாம்பு விற்பனை மற்றும் அதன் பயன்பாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய்க்கு ஹேர் கலரிங் ஷாம்பு விற்பனையாவதாக இந்தத் துறையில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் தலைமுடிக்கு வண்ணம் பூசுவதற்காக ஷாம்பு, டை, மெஹந்தி போன்ற பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தென் இந்தியாவில் மட்டும் தலைமுடிக்கு வண்ணம் பூசும் பொருட்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாவதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதில் அதிகபட்சமாக ஹேர் கலரிங் ஷாம்பூ மட்டும் தென்னிந்தியாவில் 338 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் நாட்டில் விற்பனையாகும் மொத்த ஹேர் கலர் ஷாம்புகளில் 43 சதவீதத்தை தென்னிந்தியர்களே வாங்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 26 சதவீத விற்பனை நடக்கிறது. நகர்புறங்களில் இதன் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது போல, வரும் காலங்களில் கிராமங்களிலும் விற்பனை அதிகரிக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.