இன்ஸ்டாவிலும் மெஸ்ஸி சாதனை; 6 கோடிக்கும் அதிகமான லைக்ஸ்!

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தன் கையில் வெற்றிக் கோப்பையுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம், ஆறு கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் கத்தார் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி, முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணியை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன்பாக 1978 மற்றும் 1986-ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, தற்போது 3-வது முறையாக மகுடம் சூடியுள்ளது. மேலும் இரண்டு ஃபிஃபா ‘கோல்டன் பால்’ விருதுகளை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.

36 ஆண்டுகளுக்கு பின்பு உலக கோப்பையை வென்றதை ஒட்டு மொத்த அர்ஜென்டினா மக்களும், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலாக, மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு பதிவுக்கு 6 கோடிக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர். விளையாட்டு வீரர் ஒருவரின் பதிவுக்கு கிடைத்த அதிகபட்ச லைக்ஸ் இதுவாகும்.

கோப்பையை வென்ற பின்பு மெஸ்ஸி புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், “நான் பல முறை கனவு கண்டேன், நான் அதை மிகவும் விரும்பினேன், நான் இன்னும் விழவில்லை, என்னால் அதை நம்ப முடியவில்லை….. என் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

சில மணிநேரங்களில், மெஸ்ஸியின் இன்ஸ்டாகிராம் பதிவு, அதிகம் விரும்பப்பட்ட விளையாட்டு வீரரின் பதிவு என சாதனை படைத்தது. இதற்கு முன்பு, போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸியுடன் சதுரங்கம் விளையாடுவது போன்ற புகைப்படம், 4 கோடியே 20 லட்சம் லைக்குகளை பெற்றிருந்த நிலையில், அதனை மெஸ்ஸியின் பதிவு முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் 40.5 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள மெஸ்ஸி, ஒரு பதிவுக்கு 14 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com