இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அதிரடியாக முடக்கியது மெட்டா..!

Insta meta
Insta meta
Updated on

அறிவியல் முன்னேற்றம் தந்த மாபெரும் அத்தியாவசியங்களுள் மொபைல் போனும், கொட்டிக் கிடக்கும் இணையதளங்களும் நமது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சல் முதல் அனைத்திற்கும் அவசியமாகிறது இணையதளம் என்றால் அது மிகையாகாது. குழந்தைகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி கைகளில் உள்ள மொபைலில் வரும் காட்சிகள் மற்றும் பதிவுகளை பார்ப்பதில் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) என ஏராளமான தளங்களில் நமது எண்ணங்களைப் பதிய வைக்கலாம்; அதேபோல் மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்தையும் காணலாம். இதில் கற்றுக்கொள்ள ஏராளமான நன்மைகள் இருக்கும் அதே வேளையில், தவிர்க்க வேண்டிய தீமைகளும் உண்டு என்பதை நாம் அறிவோம்.

இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பதிவுகள் மூலம் வருமானமும் உள்ளதாக கூறப்படுவதால் சிலர் லைக்ஸ் பெற எல்லைகளை தாண்டிய வீடியோக்களையும் பதிவு செய்கிறார்கள். குறிப்பாக சிறுவர் சிறுமியரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதால் இது போன்ற பாலியல் ரீதியான வீடியோக்களை தடை செய்ய பலரும் குரல் தந்து வருகின்றனர். இதில் பிரபலமான பதிவர்கள் போடும் பதிவுகளுக்கு இடையே வரும் விளம்பரங்களும் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான விளம்பரங்களை (CSAM) பரப்பியதாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களில் செயல்பாட்டில் இருந்த 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை மெட்டா நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.

கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட மெட்டா என்ற தொழில்நுட்ப நிறுவனம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடகத் தளங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்கள் இடம் பெற்றதாக மத்திய அரசு இந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய இன்ஸ்டாகிராமின் இந்த விளம்பரங்கள் மற்றும் கணக்குகள் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பாலியல் சுரண்டல் தொடர்பான வழிகாட்டுதல்களை கடுமையாக மீறியதால் இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த முறைகேடுகளை தடுக்க மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, தன்னிச்சையாக இத்தகைய கணக்குகளையும் விளம்பரங்களையும் நீக்கியுள்ளது.

meta
meta

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

குழந்தைகள் தொடர்பான பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களை முழுமையாக அகற்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக மெட்டா தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை மெட்டா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.மேலும், ஸ்பேம் (Spam) மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நெட்வொர்க்குகளையும் மெட்டா தொடர்ந்து முடக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தளங்களில் தவறான உள்ளடக்கம் இடம்பெறுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்றும் தொடர்ந்து தடுப்போம் என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் இதுபோன்ற உள்ளடக்கங்களை ஊக்குவிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அரசு அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, மெட்டா நிறுவனம் ஒரு விரிவான வலைப்பதிவை வெளியிட்டது.

அதில், தனது செயலிகள் முழுவதும் குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை எதிர்த்து போராடுவதற்கான தனது முயற்சிகளை விவரித்திருந்ததுடன், செயற்கை நுண்ணறிவு மூலமான கண்டறிதல், விளம்பர மறுஆய்வு அமைப்புகள் மற்றும் பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருந்தது.

குழந்தை சுரண்டலை ஒரு கொடூரமான குற்றம் என்று வர்ணித்த மெட்டா, தனது தளங்களிலும் அதற்கு வெளியேயும் இவ்வகை துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாளும் தீவிரமாக செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

பொருத்தமற்ற ஆர்வத்தின் அடிப்படையில், குழந்தைகள் இடம்பெறும் விளம்பரங்களை தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே மக்களுக்குக் குறிவைக்கிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது எனவும் மெட்டா நிறுவனம் தன்னிலை மறுப்பாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உலகளவில் 4 மில்லியனுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான கணக்குகளையும், 36 மில்லியன் குழந்தைகள் சுரண்டல் உள்ளடக்கங்களையும் தானாகவே அகற்றியது மெட்டா என்று குறிப்பிட்டுள்ளது.

குழந்தை சுரண்டலை ஒரு கொடூரமான குற்றம் என்று வர்ணித்த மெட்டா, தனது தளங்களிலும் அதற்கு வெளியேயும் இவ்வகை துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாளும் தீவிரமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளைச் சுரண்டுவதற்கு எதிரான எங்கள் கொள்கைகளை மீறிய இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் குறித்த சமீபத்திய செய்தி அறிக்கைகள் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்: இந்த பாதிப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், இதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் தளங்களில் இடம்பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை, மேலும் இதை எதிர்த்து போராடுவதற்கான எங்கள் முயற்சிகளை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றும் குறிப்பிட்டது.

மேலும் இந்த வழக்குகள் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பே, தங்களது அமலாக்க அமைப்புகள் விதிமீறல் விளம்பரங்கள் பலவற்றையும் அவற்றின் பின்னணியில் உள்ள கணக்குகளையும் கண்டறிந்து முடக்கியிருந்ததாக கூறியுள்ளது.

"எங்கள் அடுத்தகட்ட விசாரணையின் விளைவாக, மேலும் விளம்பரங்களை அகற்றுதல், கணக்குகளை முடக்குதல் மற்றும் கொள்கையை மீறும் உள்ளடக்கத்துடன் இணைக்கப்பட்ட URL-களைத் தடுப்பது உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன," என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் ஷாக்..! ஆரோக்யா பால், தயிர் விலை நாளை முதல் உயர்வு!
Insta meta
logo
Kalki Online
kalkionline.com