மெட்டாவேர்ஸ் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மெட்டா அதன் அடுத்த கட்ட பணி நீக்கத்திற்கு திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த முறை மெட்டாவேர்ஸ் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டாவேர்ஸிற்கான தனிப்பயன் சிப்களை உருவாக்கும் குழுவில் உள்ள அதிகப்படியான ஊழியர்களை மெட்டா நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக பேஸ்புக் அஜில் சிலிகான் டீம் மற்றும் ஃபாஸ்ட் எனப்படும் சிலிக்கான் யூனிட்டில் பணியாற்றும் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த உள்விவாத நிகழ்வு ஒன்றில் தன் ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், பணிநீக்க நடவடிக்கைகள் மோசமாக இருந்தால், அது இந்நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்புகளை உருவாக்கும் திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் ஃபாஸ்ட் யூனிட்டில் கிட்டத்தட்ட 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மெட்டா சாதனங்களின் தனிப்பயன் சிப்களை உருவாக்குவது இவர்களின் பொறுப்பாகும். இத்தகைய சிப்கள் மெட்டா நிறுவன சாதனங்கள் தனித்துவமான பணிகளை செய்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்கும் பயன்படுத்தப்படும். இதனால் சந்தையில் உள்ள மற்ற AR/VR சாதனங்களில் இருந்து மெட்டா நிறுவன சாதனங்கள் தனித்து நிற்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஃபாஸ்ட் பிரிவை மறு கட்டமைக்கும் நோக்கத்துடன் பணிநீக்க நடவடிக்கையை மெட்டா நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தற்போதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 21,000 ஊழியர்களுடன் தற்போது பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் கணக்குகளும் சேரும்.
இதே போல மார்ச் மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த ஆண்டின் பெரும்பாலான பணி நீக்க நடவடிக்கைகள் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் மட்டுமே நடக்கும் என மார்க் ஜுக்கர்பெர்க் சுட்டிக்காட்டினர். அத்துடன் சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் இது 2023 ஆம் ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்படலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பின்படி தற்போது பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.