மெட்ரோ ரயில்: அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது

மெட்ரோ ரயில்: அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது

மெட்ரோ 2 ம் கட்ட பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கியது.  

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  சென்னையில்  வழித்தடம் 3- மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8கி.மீ நீளத்திற்கும், வழிதடம் 4 - கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும், வழித்தடம் 5 - மாதவரம் முதல் சொலிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கும் என 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் 48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 இரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு 10 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டப்படும் நிலையில் 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிரீன்வேஸ் சாலையில் இருந்து 2வது  சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மார்ச் மாதம் 2ம் வாரத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது மாதவரம் பால்பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரை இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் மாதவரம் முதல் வேணுகோபால் ஷாப்ட் வரையிலும், அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை மார்ச் 2ம் வாரத்திலும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்படும் என்றும், இதேபோல் சேத்துப்பட்டில் மே முதல் வாரத்திலும்,  மெரினாவில் ஜூன் மாதம் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com