ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியின் முதல் பெண் ஆளுநர் எனும் சாதனைப்படைத்தார் மைக்கேல் புல்லக்!

மைக்கேல் புல்லக்
மைக்கேல் புல்லக்Editor 1
Published on

ஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஏ) முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் மைக்கேல் புல்லக். இதன்மூலம் 63 ஆண்டுகால ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் முதல் பெண் ஆளுநர் எனும் வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பிலிப் லோ பதவி வகித்துவந்தார். அப்பதவியில் ஏழு ஆண்டுகள் இருந்த பிலிப் லோவின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த மைக்கேல் புல்லக் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய நிதிச் சேவைத் துறையானது ஆண் ஆதிக்கம் மற்றும் நாட்டில் மிகப்பெரிய பாலின ஊதிய இடைவெளியைக் கொண்டுள்ளது. இந்நிலையில், மைக்கேல் புல்லக்கின் புதிய நியமனம் “புதிய தலைமைத்துவக் கண்ணோட்டத்தை வழங்குவதற்கும் பாலின ஊதிய ஏற்றத்தாழ்வுக்கான சமநிலையைத் சரிசெய்ய உதவும்" என அந்நாட்டு கருவூலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் புல்லக் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் புல்லக் முன்பு, ஆஸ்திரேலியாவில் நிலவிவரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதங்களை சரிசெய்வது ஆகியவற்றை மைக்கல் புல்லக் எவ்வாறு கையாள்வார் எனும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய நியமனம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மைக்கல் புல்லக், "ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியின் முதல் பெண் ஆளுநர் என்ற பதவியை ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. ஆஸ்திரேலிய மக்களின் நலனுக்காக ரிசர்வ் வங்கி அதன் கொள்கை மற்றும் செயல்பாட்டு நோக்கங்களை வழங்குவதை உறுதி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேநேரம் நாட்டின் நிதி நிலமைகளை சமாளிப்பது என்பது சவாலாகவும் உள்ளது. ஆனால் இதுபோன்ற நேரத்தில் ஆதரவாகவும் நம்பிக்கை அளிக்கும் வலுவான நிர்வாகக் குழு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

தற்போது ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் புல்லக், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் மத்திய வங்கியில் ஆய்வாளராக சேர்ந்தார். அதன்பிறகு தன்னுடைய கடின உழைப்பால் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு, உதவி ஆளுநர் மற்றும் திட்டக் குழுவின் துறையின் தலைவர் உட்பட மூத்த நிர்வாகப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கல் புல்லக்கின் நியமனம் குறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸின் பதிவில், திருமதி புல்லக் "மத்திய வங்கியில் நீண்ட மற்றும் புகழ்பெற்ற தொழிலைக் கொண்ட ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலகம் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை சந்திப்பதில் மைக்கல் புல்லக் ஆஸ்திரேலிய ரிசர்வு வங்கியை வழிநடத்தி புதிய திட்டங்களை கொண்டுவருவார் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com