உலகத் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பாகிஸ்தானில் தனது கிளை அலுவலகத்தை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 25 ஆண்டுகளாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், உலகளாவிய மறுசீரமைப்பு மற்றும் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 4) இந்த மூடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரமின்மை, மற்றும் கட்டுப்பாடான வர்த்தக சூழல் போன்ற காரணங்களும் இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமான பொது அறிவிப்பை வெளியிடவில்லை.
மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவராக இருந்த ஜவாத் ரஹ்மான், லிங்க்ட்இன் (LinkedIn) பதிவில், "இது ஒரு சகாப்தத்தின் முடிவு... பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக மூடுவதை இன்று அறிந்தேன். எஞ்சியிருந்த சில ஊழியர்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதார எதிர்காலத்திற்கு ஒரு கவலையளிக்கும் அறிகுறி என முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தனது X (முன்னர் ட்விட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் ஒரு காலத்தில் பாகிஸ்தானில் விரிவாக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2022 இறுதிக்குள் வியட்நாமை தேர்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கும் என்றும், உள்ளூர் கூட்டாளர்கள் மற்றும் பிற அருகிலுள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மூலம் இந்த சேவை தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் சுமார் 9,100 ஊழியர்களை (மொத்த பணியாளர்களில் 4%) குறைக்கும் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் 2023-க்குப் பிறகு எடுத்து வருகிறது. இந்த பாகிஸ்தான் அலுவலக மூடல், அதன் உலகளாவிய மறுசீரமைப்பு உத்தி மற்றும் கிளவுட்-சார்ந்த வணிக மாதிரிக்கு மாறுவதன் ஒரு பகுதியாகும்.