பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.பால் உற்பத்தியாளர்களின் அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்றும் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று தமிழக பால்வளத் துறை சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கான சேவையை மேலும் அதிகரிப்பது, அரசின் நலத் திட்டங்களை பால் உற்பத்தியாளர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுகூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து விளக்கமளித்தார் .பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து காலங்களிலும் ஒரே சீரான விலையை வழங்குவது ஆவின் மட்டுமே என அமைச்சர் கூறினார். வேறு எந்த நிறுவனங்களை விட மிகத் தரமாகவும், விலை குறைவாகவும் ஆவின் பால் விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகளை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல், பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, ஆவினின் தினசரி பால் கையாளும் திறனை70 லட்சம் லிட்டராக உயர்த்தவேண்டும்.
கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள காலி நிலங்கள், கூட்டுறவு சங்க அளவில் உள்ள காலி நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும். பால் உற்பத்தியாளர்களின் அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு தேவையான சரிவிகித கலப்பு தீவனத்தை தடையின்றி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.