பா(ல்)ழ்

பா(ல்)ழ்

Published on

ங்கள் கோரிக்கைகள் நிறைவேற  அனைவரும் கையில் எடுக்கும் ஆயுதம் போராட்டம்.  காலம் காலமாக இது நடந்து கொண்டு  வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் போராட்டம் முற்றிலும் வித்தியாசமானது. அரசின் கவனத்தை ஈர்க்க  உற்பத்தி செய்யப்பட்ட  பாலை சாலையில் கொட்டுகிறார்கள்.  தார் சாலைகள் வெள்ளை ஆறாக மாறி வருகின்றன. 

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம், வேலை நிறுத்தம் நடத்தி வருகிறார்கள்.  அவர்கள் தங்கள் உழைப்பை ஒரு நாள் நிறுத்தி வேலை நிறுத்தம் அடுத்ததாக தொடர் வேலை நிறுத்தம் என்று ஈடுபடுகிறார்கள்.   இவர்கள் வங்கியிலோ, கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, கடன் வாங்கி மாடுகளை வளர்த்து அதற்கு தினசரி செலவுகள் செய்து  ஒரு நாள் கூட வேலை நிறுத்தம் செய்யாமல் பாடுபடுகிறார்கள்.  வியர்வை சிந்தி உழைத்து அதன் மூலம் கிடைக்கும் பாலை அநியாயமாக சாலையில் கொட்டி தங்கள்  உழைப்பை தாங்களே அசிங்க படுத்துகின்றனர். இதன் மூலம் மட்டுமே எதிர்ப்பை காட்டலாம் என்று கண்டுபிடித்த அந்த நல்ல மனிதர் யாரென்று தெரியவில்லை.

பாலுக்காக ஏங்கித் தவிக்கும் அனாதை குழந்தைகள் எத்தனை எத்தனை! அந்த குழந்தைகளுக்கு இலவசமாக தந்து  போராட்டம் நடத்தலாம்.  வயிறார சாப்பிட வழியில்லாமல் முதியோர் இல்லத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்  நினைத்துப்பார்க்க வேண்டாமா?

'நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' மூதுரையில் அவ்வையார் சொல்லி இருப்பார். ஆனால் சாலையில் கொட்டும் பால் எந்த வாய்க்கால் வழியாக  ஓடி எந்த புல்லின் பசிக்கும் உணவாகாது. தங்கள் ரத்தம் சாலையில் ஓடுவதை பார்க்கும்  பசுக்களின் கண்களில் உதிரம் கொட்டுவதை அவர்களால் நிச்சயம் உணர முடியாது.  கோரிக்கை நியாயமானது. தேர்ந்தெடுத்த வழி முறை தவறு. எல்லாவற்றிக்கும் ஒரு மாற்று வழி உண்டு. சாலைகளில் உங்கள் உணர்வுகளை கொட்டி போராடுங்கள். இன்னொருவருக்கு உணவாக போக இருப்பதை கொட்டாதீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com