இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான கிரெடிட் சுவிஸ் தெரிவித்துள்ளது.
-இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்திர உலக சொத்து அறிக்கையில் தெரிவித்ததாவது;
கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும்.
2021-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026-ல் இந்த எண்ணிக்கை 105 சதவீதம் உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதையடுத்து சீனா 2-ம் இடத்திலும், ஜப்பான் 3-ம் இடத்திலும், பிரிட்டன் 4-ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத் தக்கது.