‘அரசின் நிதி நிலைக்கேற்ப மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும்’ அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

‘அரசின் நிதி நிலைக்கேற்ப மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும்’ அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து பேசியபோது அவர், '’தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் 5ம் தேதி வெளியிட இருந்தோம். ஆனால், 7ம் தேதி 'நீட் போர்டு' தேர்வுகள் நடைபெற இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மே மாதம் 8ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிட உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த கால ஆட்சியில் வீண் செலவுகள்செய்து இருக்கிறார்கள் என்பதை சிஏஜி அறிக்கை காண்பித்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தது முதல் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகளவில் உயர்த்தி இருக்கிறோம் என பெருமையோடு கூற முடியும். இந்த ஆண்டு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியைத் தேடி வந்துள்ளார்கள். கடந்த ஆட்சியில் அரசு பள்ளியில் இருந்து மூன்று சதவிகிதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் சென்று இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 2.18 கோடி ரூபாய் அளவுக்கு தேவையற்ற செலவுகளைச் செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேபோல, பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகளையும் வழங்கவில்லை. வீடுகள் வழங்கியதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், திருச்சியில் வீடுகள் வழங்கியதில் லட்சத்தீவில் வசிக்கும் ஒருவர் பயன் பெற்று உள்ளார். இந்த விவகாரத்தில் 2016ம் அண்டு முறைகேட்டில் ஈடுபட்ட ஆறு அதிகாரிகளை எங்கள் ஆட்சியில் பணியிடை நீக்கம் செய்து இருக்கிறோம். இந்தத் துறையில் பல்வேறு முறைகேடுகளைக் கடந்த கால அரசு செய்துள்ளது. அதே போல SC, ST மக்களுக்கு செல்ல வேண்டிய நலத்திட்டங்கள் அந்த சமூகத்தினருக்குச் செல்லாமல் மற்ற சமூகத்தினருக்கு கொடுத்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மடிக்கணினி திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை. கடந்த ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே, கடந்த ஆட்சியில் விடுபட்டதையும் சேர்த்து மொத்தமாக 14 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டி உள்ளது. இதில் தேவைக்கேற்ப மற்றும் அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்’' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com