சிறார் இலக்கியத் திருவிழா: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கம்!

சிறார் இலக்கியத் திருவிழா:  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கம்!

பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறார் இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சிறார் இலக்கியத் திருவிழா 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுக்க அரசுப்பள்ளிகளில் படிக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முயற்சியே இலக்கிய மன்றங்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை நடத்தி இருக்கிறது .

அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான இந்த பயிலரங்கத்திற்கு அழைக்கப்பட்டனர். தமிழ் மொழியின் அடையாளமாக விளங்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கதைசொல்லிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் உரையாடி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை இந்த ஏற்பாட்டினை செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Anbil Mahesh
Anbil Mahesh

மார்ச் 27 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறும் பயிலரங்கில் தொடக்க விழா இன்று 27-03-23 மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இது குறித்து அமைச்சர் பேசியபோது "குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் ஆசைப்பட்டார். அதன்படியே இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. வகுப்பறையில் கிடைக்கும் மதிப்பெண் மட்டுமே நம்மை மதிப்பீடு செய்யாது என்றும் பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாக கருதுகிறேன்" என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம் என தெரிவித்தார். இன்றைய முதல் நாள் நிகழ்வில் முக்கிய விருந்தினராக எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்டு இலக்கியம் கற்பதன் சிறப்பினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com