அமைப்புசாரா தொழிலாளர் நலத்திட்ட உதவித் தொகையை 15 நாட்களில் வழங்க அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்!

தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம்
தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம்

‘அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 18 லட்சம் தொழிலாளர்களுக்கு, 1551 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்.

இன்று (07.06.2024) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம், தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதள செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், “தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 06.06.2024 அன்றுள்ளவாறு மொத்தம் 44,09,439 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.

மாவட்ட அளவில் வாரிய பணிகளான பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதல் மற்றும் ஒப்பளிப்பு செய்து பணப்பயன்களை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அவர்களால் இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, ஊனம், இயற்கை மரணம் / ஈமச்சடங்கு, விபத்து மரணம், கண் கண்ணாடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இணையதள மென்பொருள் செயல்பாட்டிற்காக, ஐந்து சர்வர்கள் தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) வாயிலாக பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதள செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில தரவுகள் மையத்திடம் (TNSDC) க்ளவுட் சர்வர்கள் பெறப்பட்டு அவற்றில் இணையதள தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் வாரிய இணையதள சர்வர் தொழில்நுட்ப காரணத்தினால் இயங்காமல் இருந்து, பின்னர் பழுது சரிபார்க்கப்பட்டு 26.12.2023 முதல் இயங்கி வருகிறது. சர்வர் பழுதின் காரணமாக இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மறுபதிவேற்றம் செய்து பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்களின் மீது ஒப்பளிப்பு செய்தல் போன்ற முறையான பணிகள் தொய்வின்றி நடைபெறவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படவும் கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படியுங்கள்:
‘விஜய பிரபாகரன் தோல்வியில் சூழ்ச்சி; மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்’ பிரேமலதா மனு!
தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம்

* நிலுவை கேட்பு மனுக்களுக்கான ஆவணங்களை தொழிலாளர்களிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்வதற்காக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

* மேலும், இது தொடர்பாக அனைத்து தொழிலாளர்களும் அறியும் வகையில் நாளிதழ்களில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

* முன்னதாக, ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு மீண்டும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தொழிலாளர்களை கோர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் (TNeGA) கீழ் செயல்படும் இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி தொழிலாளர்களின் ஆவணங்களை வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு தொழிலாளர்களிடமிருந்து OTP பெறும் முறை நீக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

* ஆதார் எண் சரிபார்க்கும் பணியை கைரேகை வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு 45 பயோமெட்ரிக் சாதனங்கள் எல்காட் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மட்டும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ், செயல்பட்டு வரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதியதாக 16,00,499 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். மேலும், 18,46,945 தொழிலாளர்களுக்கு 1551,81,70,338 ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து வாரிய செயல்பாடுகளும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ‘நிலுவையிலுள்ள கேட்பு மனுக்கள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் நலத்திட்ட உதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்’ என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், வாரிய செயலாளர்கள், மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், வட்டார தொழிலாளர் இணை ஆணையர்கள், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com