தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் பிரத்யேக வலைத்தளத்தினை துவக்கி வைத்தார் அமைச்சர் கீதாஜீவன்!

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்
Published on

மிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் பிரத்யேக வலைத்தளத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் பெண்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. 19.03.1993ம் நாள் முதல் அரசாணையின் மூலம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்த இவ்வாணையம் 30.07.2008 முதல் சட்ட ரீதியான அமைப்பாக (Statutory Body) செயல்பட்டு வருகிறது. கடைசியாக இவ்வாணையம் 11.02.2022 அன்று மாற்றியமைக்கப்பட்டு (Reconstitution), அ.ச.குமரியின் தலைமையில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் மகளிர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு நேரடியாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும், தபால் மூலம் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இவற்றிக்கு ஆணையம் காவல்துறை, நீதித்துறை, மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட சமூகநல அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மையங்கள், தன்னார்வ சமூக அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் உரிய தீர்வு காண முயல்வதுடன் நேரடி விசாரணைகள் வாயிலாகவும் சில புகார் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. பொதுவெளியில் பெண்கள் பாதிக்கப்படும்போது அத்தகைய பிரச்னைகளிலும் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.

குடும்ப வன்முறை, சொத்து பிரச்னை மற்றும் எதிர்பாராத இன்னல்களை எதிர்கொள்ளும் மகளிர் சட்ட ரீதியான ஆலோசனைகள் பெறுவதற்கும் மகளிர் ஆணையம், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியுடன் இலவச சட்டசேவை மையத்தினை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு, பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள், சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கான உதவி எண்கள் ஆகியவை குறித்து அனேக கருத்தரங்குகளை நடத்தி மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், பொது நிர்வாகம் போன்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் பயிலும் மாணவ, மாணவிகளும் இங்கு உள்ளுறை பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.

எனவே, மகளிர் ஆணையத்தின் பணிகள் அனைத்து மகளிருக்கும் சென்றடைந்து அவர்கள் பயணடையும் வகையிலும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மகளிர் அனைத்து தகவல்களையும் இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ள விரும்புவதால் ஆணையத்திற்கென முதன்முறையாக தனி வலைதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரி www.tnwomencommission.tn.gov.in. இவ்வலைதளத்தில் ஆணையத்தின் அமைப்பு, பணிகள், தொடர்பு கொள்வதற்கான ஊடக முகவரிகள், பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளை அணுகுவதற்கான முகவரிகள் ஆகியவை விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
கேரளா நிலச்சரிவு: முன்னரே எச்சரித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?
அமைச்சர் கீதா ஜீவன்

மேலும், வருங்காலத்தில் இணையதளம் வாயிலாகவே மகளிர் தங்கள் புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் மீது ஆணைய வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், புகார் மனுக்களின் மீது தாமத நடவடிக்கை கண்காணித்திடவும் ஏதுவாக இவ்வலைத்தளத்தில் தனி இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிர் தங்கள் புகார்களை இணையம் வாயிலாக பதிவு செய்யவும், அவை நிலுவையில் உள்ள அலுவலகங்கள் விபரம், விசாரணை நிலவரம் குறித்து  எளிதாக அறிந்து கொள்ளவும் ஏதுவாகும்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி அ.ச.குமரி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், செயலர் மற்றும் சமூக நல ஆணையர் வே.அமுதவல்லி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, அரசு இணைச் செயலாளர் ச.வளர்மதி மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com