வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்!

வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்!
KAMALAKANNAN

நெடுஞ்சாலைத் துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ கோட்டங்களின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள், திருவான்மியூர் – அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி, வடிகால் அடைப்பு அகற்றும் பணி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தக் காலத்துக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டியது, சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் முக்கியப் பணியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செய்யும் பணிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஒப்பந்ததாரர்களின் தங்கள் பணிகள் அனைத்தும், 30.9.2023க்குள் முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர் குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றில் கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு, காலக்கெடு நிர்ணயித்து குறிப்பிட்ட காலத்துக்குள் நில எடுப்புப் பணிகளை முடிக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஒப்பந்ததாரர்களை அழைத்து, அவர்களிடம் காலக்கெடு நிர்ணயித்துள்ள விவரங்களை தெரிவித்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணிகளைத் தொடர்ந்து, பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் – (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபாலப் பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபாலப் பணி, ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் - குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணி போன்ற அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், திட்ட அலுவலர் பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், சென்னை மெட்ரோ தலைமைப் பொறியாளர் இளங்கோ மற்றும் கோட்டப் பொறியாளர்ளும், துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com