சென்னையில் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்களை தடுக்க மழைநீர் வடிகால் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் இந்த பணிகள் எப்போது முடியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே சென்னையில் டிசம்பர் மாதத்தை கருப்பு மாதம் என்றே சொல்வார்கள். மழை, வெள்ளம் என பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள்ளாவது வடிகால் பணிகள் முடிவடையுமா என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நிலையில், சென்னை மணப்பாக்கத்தில், மோசமான சாலைகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் பருவமழை காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்றார். குறிப்பாக, மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என கூறினார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.