ஈஷாவின் விவசாயக் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் மெய்யநாதன்!

ஈஷாவின் விவசாயக் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் மெய்யநாதன்!
Published on

ஷா யோக மையத்தின், ‘காவேரி கூக்கூரல் இயக்கம்’ சார்பில் நாளை ஜூலை 16ம் தேதி புதுக்கோட்டையில் மாபெரும் விவசாயக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும்  கலந்து கொள்ள இருக்கிறார். இந்தக் கருத்தரங்கில்  சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து, காவேரி கூக்குரல் இயக்க  தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், “சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாகப் பயிர் செய்வது குறித்த பயிற்சிகள் நடத்தப்படும். அது குறித்த சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் இவை விரிவாக விளக்கப்படும். இந்த விளக்கம் சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வரும் மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வனின்  மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இதன் மூலம் வெறும் இரண்டு ஏக்கரில் வருடத்திற்கு 4 லட்ச ரூபாய்   லாபம் ஈட்டுகிறார்.  மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது.

மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பயிரிடலாம். மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்துக்குக் காத்திருக்காமல், ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் ஈட்டலாம். நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாகவே உள்ளது. ஈஷாவை பொறுத்தவரை கடந்த ஆறு ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது, மற்ற நறுமணப்பயிர்களையும் சமவெளியில் வளர்க்கும் முறைகளும் விளக்கப்படும். விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தையும் உயர்த்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com