இன்று திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையை நேற்று முன் தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என தொடங்கி பதவியேற்றார். சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றையும் கொண்டிருப்பேன் என உதயநிதி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் மேடையிலேயே முதலமைச்சர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை என்று பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு தற்போது சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.