வனப் பாதுகாப்பு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.மதிவேந்தன்!

வனப் பாதுகாப்பு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.மதிவேந்தன்!
Published on

னப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து சென்னை, கிண்டி வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று அமைச்சர் மா.மதிவேந்தன் வனத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வன உயிரின மனித மோதல்கள் தடுப்பு நிவாரணமாக கடந்தாண்டு 8.65 கோடி ரூபாயும், நடப்பாண்டு 10 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மரகத பூஞ்சோலை திட்டத்தில் கடந்தாண்டு 4.79 கோடி ரூபாயும், நடப்பாண்டு 8.78 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வனப் பாதுகாப்புப் படை நவீன மயமாக்கல் பணிகளுக்காக 6.29 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் புலிகள் காப்பகம் மேம்பாட்டுப் பணிகளுக்கு 10.26 கோடி ரூபாயும், வனச் சாலைகள் மேம்பாட்டுக்கு 5.41 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது. கிண்டி குழந்தைகள் பூங்கா 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், தேவாங்கு சரணாலயம், புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள், காவேரி வன உயிரின காப்பகம், சூழல் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நீலகிரி வரையாடுகள் காப்பகம் 25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் மூலம் காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் 2022 - 23ம் ஆண்டு முதல் 2029 - 30 வரை எட்டு ஆண்டுகளுக்கு 920.52 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுவதையும் வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் 33 சதவீத பசுமைப் பரப்பை உயர்த்துவதற்கான திட்டங்கள், ஈரநில மேம்பாட்டுப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேற்காணும் திட்டங்களின்கீழ் 2022 - 23ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் 2023 - 24ம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / தலைமை செயல் அலுவலர் சுதாநாஷீ குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / வனச் செயல் திட்டம் விஜேந்திர சிங் மாலிக், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) மீதா பானர்ஜி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / இயக்குநர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு (பயிற்சி மற்றும் ஆராய்ச்சி) நிறுவனம் அ.உதயன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / தலைமை இயக்குநர் தமிழ்நாடு பசுமை இயக்கம் தீபக் ஸ்ரீவத்சவா, காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை திட்ட இயக்குநர் ஐ.அன்வர்தீன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com