வாகனங்களுக்கான பாதுகாப்பு சம்பந்தமாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் தரமான நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல நகரங்களையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படி சாலைகள் நவீனமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் டயர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் சாலை விபத்துக்களை பெருமளவில் தவிர்க்கவும், உயிரிழிப்புகளைக் குறைக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் அம்ரிஸ்டர் – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “இந்தியாவில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வாகனங்களின் டயர் தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்திய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகமான நிலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இந்தியா முழுவதும் விற்பனையாகும் டயர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் பாதுகாப்பான பயணம் உறுதியாகும். இதற்காக டயர் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வாகன டயர்களின் தரத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது மூலம், டயர் வெடித்து விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படு வருகின்றன. இதன் மூலம் விரைவில் டயர் தயாரிப்புக்கான புதிய வரையறையை மத்திய அரசு வெளியிடும்.
மேற்கண்ட சாத்தியக்கூறுகளினால் டயர்களின் தயாரிப்பு செலவு அதிகமாவதால் விலையும் அதிகரிக்கும். டயர் விலை கூடினாலும் அதன் உழைப்பும், தரமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நவீன சாலைகளில் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் டயர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.