சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி!

சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 2-வது நாளாக மாற்றமின்றி, கிலோ 95 ரூபாயாக நீடிக்கிறது. சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை இன்று தொடங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தக்காளி விளைச்சல் பாதிப்பால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று 35 ரூபாய் சரிந்து 95 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனை கடையில் 100 ரூபாய்க்கும், சில்லறை கடைகளில் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம் புறநகரில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 100 டன் தேவை உள்ள நிலையில், இன்று 36 லாரிகளில் 410 டன் அளவில் மட்டுமே தக்காளி வந்துள்ளது.

இந்நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ தக்காளி 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனினும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 260 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், சென்னையில் உள்ள 82 நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும், நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com