கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதலே புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம்.!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

2023-2024 நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் "புதிய மாதிரி பாடத்திட்டத்தால்" பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணை பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளை சேர்ந்த 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு தொழில் துறையினரின் ஆலோசனைகளை பெற்று மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இதில், 166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள் அடங்கும். ​மேலும், வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் பாடங்கள் உட்பட பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் பகுதி ஒன்று மொழிப் பாடம், பகுதி இரண்டு ஆங்கிலம்,

பகுதி மூன்று முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்களும், பகுதி நான்கில் திறன் மேம்பாட்டுப் பாடங்கள், பகுதி ஐந்தில் மதிப்புக் கூட்டுக்கல்வி என 5 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம் எனவும், பகுதி மூன்றில் உள்ள முக்கிய பாடங்கள் 75 சதவீதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய மாதிரி பாடத்திட்டங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டு உளளது.

பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முக்கியப் பாடங்கள், விருப்பப் பாடங்கள் மற்றும் செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கிடையே மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது.

மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com