தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. இவர் கடந்த1996 -2001ம் ஆண்டு காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது, அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக இவர் மீது கடந்த 2003ம் ஆண்டு புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் அவர் இந்த நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயருக்குப் பதிவு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தது.
இது சம்பந்தமாக, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மாமியர் சரஸ்வதி உட்பட பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணை முடிந்த நிலையில், சென்ற 2004ம் ஆண்டு பொன்முடி உட்பட பத்து பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனையடுத்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பொன்முடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து 2007ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து, பொன்முடி உட்பட பத்து பேர் மீதான இந்த வழக்கு விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உட்பட, இதில் தொடர்புடைய மூன்று பேர் இறந்து விட்டனர். அதையடுத்து, பொன்முடி உட்பட மற்ற ஏழு பேர் மீது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பு விசாரணயும் முடிவு பெற்ற நிலையில், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி, ‘இந்த நில அபகரிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்வதாக’ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.