அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை!

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இது குறித்த விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட முதல் இரண்டு நாட்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அவருடைய உடல்நிலையை தொடர்ந்து காவிரி மருத்துவமனை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கண்காணித்து வருகின்றனர். மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்ற அமலக்கத்துறை வைத்த கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கலாம் என நீதிபதி சூரிய காந்த் அமர்வு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com