அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளக்கமளித்தார்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி நள்ளிரவு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அடிக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த அவர், கடந்த புதன் கிழமை மீண்டும் தலைசுற்றல் காரணமாக அட்மிட் செய்யப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பித்தப்பையில் கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், நாள்தோறும் 11 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் செந்தில்பாலாஜி, அதற்கு ஏற்ப உணவு உட்கொள்ளாதது, தீவிர மன அழுத்ததிற்கு தள்ளியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரின் உடல் எடை சுமார் 8 கிலோ குறைந்ததையும், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதையும் மருத்துவக்குழு உறுதி செய்தது.இந்த நிலையில் இவரின் உடல் நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
செந்தில்பாலாஜிக்கு கணையம் உள்ளிட்ட உள் உறுப்புகளில் கொழுப்புக் கட்டிகள் உள்ளதே அவரது உடல்நலக் குறைவுக்கான காரணம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மூளைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கொழுப்புக்கட்டி உள்ளது ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதான், கால், கைகள் மரத்துப் போக காரணமா என மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.