புதிய வக்பு சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது - அமைச்சர் ஷாஜகான்..!!

அமைச்சர் ஷாஜகான்
அமைச்சர் ஷாஜகான்source:hindu
Updated on

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்பு(Waqf) திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்பட மாட்டாது என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் புதிய சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அமல்படுத்தப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய வக்பு சட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்ப்பதால் அதனை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை.

உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்பு சொத்துக்களையும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றைய தினமே எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக பதில் அளித்த ஷாஜகான், உமித் (Ummat) போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துள்ள நிலையில்,அதனை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசிடம் அவகாசம் கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

புதிய சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்திலும் அது இதுவரை அமல்படுத்தப்படவில்லை; இனிமேலும் அமல்படுத்தப்படாது என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கொடையாளர்களாலும், செல்வந்தர்களாலும் பொதுமக்களின் நல்வாழ்விற்காகவும், இறைவனின் அருள் வேண்டியும் அர்ப்பணிக்கப்பட்ட உடைமைகளே ‘வக்ஃபு’ சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் போன்ற மத மற்றும் சமூக நிறுவனங்களின் பெயர்களில் தானமாக வழங்கப்பட்ட இந்த சொத்துக்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக பரவிக் கிடக்கின்றன.

இத்தகைய பரந்த அளவிலான சொத்துக்களை சரியான முறையில் கண்காணிப்பதற்கும், அவற்றின் நிர்வாகத்தில் முறைகேடுகள் ஏதும் நடந்துவிடாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு கடந்த 1954ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதன்முதலாக வக்ஃபு சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, 1958ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் முறைப்படி அமைக்கப்பட்டன.

அதன் பின்னர், கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த நிர்வாக அமைப்பை மேலும் வலுப்படுத்த, 1995ஆம் ஆண்டில் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட்டு முழுமையான வடிவத்தைப் பெற்றது. அன்று முதல் இந்த சட்ட விதிகளின் படியே வக்ஃபு சொத்துக்கள் நாடு முழுவதும் நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழலில், வக்ஃபு வாரியத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை இன்னும் கூடுதலான திறம்பட மாற்றுவதற்கும், அதன் சொத்துக்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் ஏதுவாக, தற்போதைய வக்ஃபு சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com