காதலித்த பெண்ணை மிரட்டியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது!

காதலித்த பெண்ணை மிரட்டியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது!

மிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவர் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகள் ஜெயகல்யாணி கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் சதீஷ்குமார் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து, பெங்களூரு சென்ற இந்தக் காதல் ஜோடி அங்குள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று தனது தந்தையிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்புக் கோரி புகார் கொடுத்தனர். அதில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெயகல்யாணி, அதில் தனது தந்தை சேகர்பாபுவால் கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தாங்கள் தலைமறைவாக இருந்து வருவதாகவும் கூறி இருந்தார். மேலும், கணவருக்கும், குழந்தைக்கும் ஏதாவது நடைபெற்றால் தந்தை, தாய்மாமா, காவல் ஆய்வாளர் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். அதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவாதம் கொடுத்தால் நாங்கள் தமிழ்நாட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுவதாகக் கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததாகவும், இதனடிப்படையில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, சதீஷ் அளித்திருந்த ஒரு பேட்டியில் ‘சேகர்பாபுவின் மகளை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தான் ஒரு பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமைச்சர் எங்களைப் பிரிக்க பார்ப்பதாகவும், பொய் வழக்கில் என்னை கைது செய்ய அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்ணை மிரட்டியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com