வளிமகாப்பு துணை மின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

வளிமகாப்பு துணை மின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
Published on

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், அவற்றின் மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை திருவான்மியூர் மற்றும் தரமணியில் புதிதாக அமையவிருக்கும் வளிமகாப்பு துணை மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் சென்னை திருவான்மியூரில் 92.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகத்திலேயே முதன்முறையாக, முழுவதும் 'எண்முறை தொழில் நுட்பத்தில்‘ (Digital Technology) அமைக்கப்பட்டு வரும் 230/33 கிலோ வோல்ட் எண்முறை வளிமகாப்பு (Digital Gas Insulated Substation) துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்புக் கழகம்) இரா.மணிவண்ணன், இயக்குநர் (திட்டம்) எம்.இராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு தரமணியில் 708 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400/230/110/33 கிவோ வளிமகாப்பு (Gas Insulated Substation) துணை மின் நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டு நடந்து வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர், தற்போது இயங்கி வரும் 230/110/33 கிவோ துணை மின் நிலையத்தினையும் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்துத் தகவல் கேட்டறிந்தார். இந்த இரு துணை மின் நிலையம் மூலம் திருவான்மியூர், தரமணி, பெசன்ட் நகர், காந்திநகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதிகளிலுள்ள சுமார் நான்கு லட்சம் மின் நுகர்வோர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு துணை மின் நிலையங்களின் பணிகளை விரைந்து முடித்து, அதனை இயக்கத்துக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com