கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் அழிப்பு.. அமைச்சர் கண்டனம்!

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
Published on

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் தவிர மற்ற குழந்தைகளும் படித்து வருகிறார்கள்.

திருவாரூர் அருகே நீலக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருவாரூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பறைகளின் நுழைவு வாயிலிலும் வகுப்பு, பிரிவு ஆகியவை தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளிலும் எழுதப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இப்பள்ளியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும், வகுப்பு ஒன்றில் இந்தி, ஆங்கில மொழிகளை விட்டுவிட்டு தமிழ் மொழி வர்ணம் பூசி அழிக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் வலுத்ததை அடுத்து தமிழ் மொழி புறக்கணிப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது. மேலும், பல்வேறு ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழில் பள்ளி நிர்வாகம் எழுதியது.

இந்தநிலையில் நாகை மாவட்டம் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தமிழ் மொழியை யாரும் அழிக்க முடியாது என்று அமைச்சர் பதிலளித்தார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் தங்கம் தென்னரசு கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com