பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுக்கிறேன் என ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஈரோடு கிழக்கு தொகுதி அரசியல் களத்தில் தற்போது சூடுபிடித்து வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்களும் சூறாவளி சுற்று பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் ஈவிகேஎஸ்க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வாக்கு சாவடியில் முதல் பெட்டியில் இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் என்றும், இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானா 5 லட்சம் கோடி கடனில் வைத்திருத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காகவே செய்து வருகிறது . திமுக ஆட்சியில் கொரனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுக்கின்றேன். பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முக ஸ்டாலின் நம்பர் 1 முதல்வராக இருக்கின்றார், தமிழகத்தை விரைவில் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.