

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பரப்புரைகள் பரபரப்பாக செல்லும் நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டங்கள் அடிப்படையில் வெளிவந்த அரசின் அறிவிப்பு மக்கள் கவனத்தை பெற்றுள்ளது எனலாம்.
இந்த பேச்சுவார்த்தையில் பொதுவாக ஊதிய நிலுவை மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது போன்ற ஊதிய திருத்தம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவது, அகவிலைப்படி (DA) , பணி நிரந்தரம், இடமாற்றம், பதவி உயர்வு, ஆசிரியர்களின் சேவை விதிகள் போன்ற பல கோரிக்கைகள் மீதான தீர்வுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை துரிதமாக நிரப்புவது மற்றும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.
பொதுவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ( பல சங்கங்களின் கூட்டமைப்பான JACTO-GEO போன்ற அமைப்புகள்) பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஊதிய திட்டம், ஓய்வு திட்டம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் எனப்படுகிறது.
இது ஒரு விரிவான கலந்துரையாடலாக இருக்கும் என்பதால் முக்கியமான கோரிக்கைகளை கோரிய அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள்/பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
பேச்சுவார்த்தையில் அரசுப்பக்கம் இருந்தும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து நேரடியாக விவாதிப்பதால் இந்த பேச்சுவார்த்தை குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை மூலம் ஊழியர்களுக்கான முக்கியமான பல கோரிக்கைகள் குறித்து கூடுதல் தீர்வுகள் அல்லது அதற்கான பரிந்துரைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அடுத்த சட்டமன்ற அமர்வு முன்பு இதன் முடிவுகள் அல்லது கருத்துகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், ஜனவரி மாத முதல் வாரத்தில் சட்டமன்ற அமர்வில் முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி அரசுக்கு நிச்சயம் தேவை எனும் நிலையில் அவர்கள் கோரிக்கைகளை ஆராய்ந்து திருப்திப்படுத்தும் தீர்வுகள் கிடைக்கும் என்ற கருத்துகளும் மக்களிடையே நிலவுகின்றன.