பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்!
Published on

ந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், முப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்கான முன்மொழிவு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முன்மொழிகள் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை பிரான்ஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்மொழிவுகளின்படி, இந்திய கடற்படைக்கு 22 ஒற்றை இருக்கை ரஃபேல் விமானங்களும், நான்கு பயிற்சி விமானங்களும் கிடைக்கும். இந்த போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கடற்படை பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் ரூ.90,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பிரான்ஸ் உடனான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான இறுதி செலவு எவ்வளவு என்று தெளிவாகத் தெரியும் என கூறப்பட்டுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் சலுகைகளை கோர வாய்ப்புள்ளதாகவும், மேலும் மேக் இன் இந்தியா உள்ளடக்கம் திட்டத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஃபேல் மரைன் ஒப்பந்தம் தொடர்பாக, முந்தைய ரஃபேல் ஒப்பந்தத்தைப் போலவே இந்தியாவும், யுரேன்ஸ் நிறுவனமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com