தவறான சிகிச்சை - பார்வை இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - இ.கம்யூ., போராட்டம்!

தவறான சிகிச்சை  -   பார்வை  இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - இ.கம்யூ., போராட்டம்!
Published on

சேலம் மாவட்டம் சின்னனூர் கிராமம், நங்கவள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் பிரசவத்திற்காக உள்நோயாக அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்கு செவிலியர்கள் ஊசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பாதிப்பால் அவருக்கு கண் வீக்கம் ஏற்பட்டது.

இது குறித்து சத்யாவின் குடும்பத்தினர் அரசு மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் அளிக்காததால் உடனே சத்யாவை அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ‘‘வலது கண்ணில் பார்வை பறிபோய் விட்டது“ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து அரசு மருத்துவமனையில் புகார் தெரிவித்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் வழங்கிய தவறான சிகிச்சையினால் கண் பார்வை இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்; சிகிச்சை அளித்த அரசு மருத்துவர், செவிலியர் உரிய மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி எதிர்காலத்தில் இந்த மாதிரி ஒரு பாதிப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், திடீரென அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com