மிஜோரத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு!

மிஜோரத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு!

மிஜோரம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. தேர்தல் நியாயமாகவும் சுமுகமாவும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை அவர்கள் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்பார்கள் என்பதால், சனிக்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது.  

மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 1,276 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் ஏற்படும் என கருதப்படும் வாக்குச்சாவடிகளில் மத்திய, மாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 8,57,063 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,39,026 பேர் பெண் வாக்காளர்கள். 40 தொகுதிகளிலும் 18 பெண் வேட்பாளர்கள் உள்பட 174 பேர் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

மிஜோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.), ஜோரம் மக்கள் இயக்கம் (இஸட்.பி.எம்.), காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மொழிச் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் வாக்காளர்களைக் கவருவதில் பா.ஜ.க. கவனம் செலுத்தியுள்ளது.

முதல்வரும் மிஜோ தேசிய முன்னணியின் தலைவர் மற்றும் காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அய்வால் மாவட்டத்தில் 12 தொகுதிகளுக்கு அதிகபட்சமாக 55 பேர் போட்டியிடுகின்றனர். ஹனாதியால் மாவட்டத்தில் குறைந்த அளவாக மூன்று பேர் களத்தில் உள்ளனர்.

மிஜோரம் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தேர்தல் பிரசாரத்தை கடைசி நிமிடத்தில் ரத்துச் செய்துவிட்டனர். எனினும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி விடியோ மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வாக்குகள் டிசம்பர்  3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முடிவுகள் வெளியிடப்படும் தேதியை மாற்றியமைக்குமாறு பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்புகள், சேவை நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. மிஜோரம் மாநிலத் தேர்தலுடன் சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பேரவைத் தேர்தல் நவ. 7 மற்றும் நவ. 17 என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குபதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்தீஸ்கரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பிரமதர் மோடி, ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com