வாக்கு எண்ணும் தேதியை மாற்ற மிஜோரம் மக்கள் கோரிக்கை! ஏன் தெரியுமா?

Mizoram Election
Mizoram Election

மிஜோரம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் தேதியை மாற்றியமைக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.

மிஜோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். இவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் 8.57 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

மிஜோரம் தவிர, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுவதால் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்தபின் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதனிடையே வாக்கு எண்ணக்கை தினமான டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு செல்ல வேண்டும் என்பதால் வாக்கு எண்ணும் தேதியை 4 அல்லது 5 ஆம் தேதிக்கு மாற்றிவைக்குமாறு மிஜோரம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மிஜோரம் மாநிலத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 87 சதவீதம் பேர்  கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஜோ தேசிய முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் இருப்பவர்களும் கிறிஸ்தவர்கள் என்பதால் பல்வேறு அரசியல் கட்சிகள், கிறிஸ்துவ இளைஞர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வாக்கும் எண்ணும் தேதியை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

எனினும் அவர்களின் கோரிக்கைய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் என்பது வேறு. வாக்கு எண்ணும் பணி என்பது வேறு. தேர்தல் எனில் அது பொதுமக்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், வாக்கு எண்ணும் பணி பொதுவானதல்ல. அது எங்களுடைய வேலை. எனவே வாக்குகள் எண்ணப்படும் தேதியை மாற்றியமைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய மிஜோரம் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒரு குழுவினர் தில்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சென்ட்ரல் யங் மிஜோ சங்கத்தின் (சிஒய்எம்ஏ) பொதுச் செயலாளர் மால்ஸாமிலியானா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் எங்களை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவோம்    என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com