யாரையும் புண்படுத்தும் படி பேச வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

 ஸ்டாலின்
ஸ்டாலின்
Updated on

திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தனது அரசியல் மற்றும் பொது மேடைப் பேச்சுகளில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்ததை டிவிட்டரில் விமர்சித்த ஆ.ராசா, 'முடத்தெங்கு' உவமையைப் பயன்படுத்தி கூட்டணி அரசியலை கடுமையாகக் கேள்வி எழுப்பினார். முடத்தெங்கு (முடக்கு + தெங்கு) என்பது 'வளைந்த அல்லது பயனற்ற தென்னைமரம்' என்று பொருள்படும்.ஒரு தென்னைமரம் தன் சொந்த நிலத்தில் வளராமல், வேலிக்கு வெளியே வளைந்து (முடமாகி) அடுத்தவர் நிலத்தில் சென்று காய்க்கிறது ஏனாதி இதன் விளக்கம்.

இதற்கு தவெக மற்றும் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ஏற்கனவே ஊட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளுடனான கூட்டத்தில், திமுக அரசு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆ. ராசாவின் இது போன்ற சர்ச்சை எழுப்பும் பேச்சுகளுக்கு அவர் சார்ந்த திமுக உள்பட பிற கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் யாரையும் புண்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியான அவரது அறிவிப்பு.

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

என பதிவிட்டுள்ளார்

logo
Kalki Online
kalkionline.com