தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (CPS) எதிராகப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே (OPS) அமல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஓய்வுபெற்ற பிறகு தங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய பழைய திட்டமே சிறந்தது என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) மற்றும் போட்டோ-ஜியோ (FOTA-GEO) ஆகிய கூட்டமைப்புகள், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தச் சூழலில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தனது இறுதி அறிக்கையை கடந்த டிசம்பர் 30, 2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. சுமார் ஓராண்டு காலமாகப் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிந்த இந்தக் குழு, நிதிநிலை மற்றும் நிர்வாக அம்சங்களை ஆராய்ந்து இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது.
இந்த முக்கியமான அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகிய மூன்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துவதால் மாநில அரசுக்கு ஏற்படக்கூடிய நிதித் தாக்கம் குறித்து விரிவான தரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவே, அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமா என்பதைத் தீர்மானிக்கும்.
இந்த சூழ்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ந் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.
இந்த நிலையில், பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பழைய ஓய்வூதியம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) நல்ல அறிவிப்பை வெளியிடுவார். 23 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் நாளை எங்கள் கோரிக்கை அமல்படுத்தப்படும். எங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்