

மாண்புமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடைய புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்' (Vibe with MKS) நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாட உள்ளார். அதன் ஒரு பகுதியாக இளம் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுகிறார். இது தமிழ்நாட்டில் நடக்கும் முதல் முறையான நிகழ்வு. இந்த நிகழ்ச்சி அடுத்த தலைமுறையின் கனவுகளை பிரதிபலிக்கும் விதமாக அமையும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு இளம் திறமையாளர்கள் பங்கு கொண்டு முதலமைச்சரிடம் நிறைய கேள்விகளை முன் வைத்தனர். "தமிழ்நாட்டு வீரர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று கேட்டபோது, "குறிப்பிட்டுச் சொன்னால் மற்றவர்கள் மனம் வருத்தப்படும். அதனால் ஒருவரை மட்டும் சொல்ல முடியாது; எனக்கு அனைவரின் விளையாட்டுமே பிடிக்கும். அனைவரும் சிறப்பாக விளையாடி நாட்டிற்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று பதிலளித்தார்.
"உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது?" என்ற கேள்விக்கு, "ஹாக்கி, கிரிக்கெட் இரண்டுமே மிகவும் பிடிக்கும். பள்ளிப் பருவத்தில் ஹாக்கி விளையாடி இருக்கிறேன்" என்றார். "யாரோடு ஜாலியாக விளையாடுவீர்கள்?" என்று கேட்டதற்கு, "இப்போது விளையாடச் சமயம் கிடைப்பதில்லை. ஆனால், இன்றும் தெருவில் யாராவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களிடம் மட்டையை வாங்கி விளையாடத் தோன்றும். கிரிக்கெட் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம். இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்" என்று உற்சாகத்துடன் கூறினார். மேலும், சிறுவயதில் தான் கிரிக்கெட் விளையாடும்போது தன் தந்தைக்கு பந்து வீசிய நினைவுகளையும் பகிர்ந்து மகிழ்ந்தார்.
"சிறுவயதில் உங்களை ஊக்கப்படுத்திய (Motivate) விளையாட்டு வீரர் யார்?" என்ற கேள்விக்கு, "கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கபில்தேவை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்தவர். அத்துடன் டெண்டுல்கர், தோனி, கவாஸ்கர் ஆகியோரையும் பிடிக்கும். இப்போது தமிழ்நாட்டிலிருந்து நிறையப் பேர் விளையாட்டுத் துறைக்கு வருகிறீர்கள், அதனால் உங்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்" என்று புன்னகையுடன் கூறினார்.
திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான கார்த்திகா பேசியபோது அரங்கம் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர் பேசத் தொடங்கியதும், அவர் திருவொற்றியூரைச் சேர்ந்தவர் என்பதை முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். பொருளாதாரச் சூழல் காரணமாக அமெரிக்கா செல்லத் தவித்தபோது, அரசு சார்பில் 1.5 லட்சம் ரூபாய் வழங்கி உதவியதையும், அவர் திரும்பி வந்தபின் 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியதையும் கார்த்திகா நன்றியுடன் குறிப்பிட்டார். "இந்த உதவி இல்லையென்றால் என்னால் சாதித்திருக்க முடியாது" என்று கூறிய அவர், கேரம் விளையாட்டில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றதை பெருமையுடன் தெரிவித்தார். தற்போது தன் வாழ்க்கையை மையமாக வைத்து 'கேரம் குயின்' என்ற திரைப்படம் உருவாகி வருவதையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அதேபோல், மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் 2011-ல் ஷாட் புட் (Shot put) போட்டியில் தங்கம் வென்றதையும், தமிழக அரசின் உதவியால் விளையாட்டு ஒதுக்கீட்டில் (Sports Quota) அரசு வேலை கிடைத்ததையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவாகப் பேசிய முதலமைச்சர், "ஒரு வெற்றியாளரின் உண்மையான பலம் பதக்கங்களில் மட்டுமல்ல; அவர்களிடம் இருக்கும் ஒழுக்கம் (Discipline), அழுத்தத்தைக் கையாளுதல் (Pressure handling), விடாமுயற்சி ஆகியவற்றில்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த இளம் வீரர்களின் தெளிவையும், தன்னம்பிக்கையையும் பார்த்து வியந்து போனேன். இவர்கள் விளையாட்டைத் தாண்டி, தமிழ்நாட்டின் எதிர்காலப் பெருமையை (Future legacy) உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம் இளைஞர்கள் மீது எனக்கு எப்போதும் தனி நம்பிக்கை உண்டு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.