அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதற்கு மோடியும் பா.ஜ.கவும் காரணமல்ல!

அயோத்தியில்  ராமர் ஆலயம் கட்டுவதற்கு மோடியும் பா.ஜ.கவும் காரணமல்ல!
Published on

திரிபுரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து ஆளும் பா.ஜ.க. அரசு தேர்தல் பிரசாரத்தை துவக்கும் முகமாக ரதயாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சப்ரூம் என்னுமிடத்தில் பா.ஜ.க.வின் ரதயாத்திரையை தொடங்கிவைத்துப் பேசினார். அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்படுமா இல்லையா என்ற கேள்வி நீண்டகாலமாக மக்கள் மனதில் இருந்து வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதிலும் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை. ஆனால், நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

ராமர் ஆலயம் கட்டப்படும் என்று நாங்கள் தெரிவித்தபோது, 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி, அதற்கான தேதியை உங்களால் தெரிவிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் அதற்கான தேதியை அப்போது நிர்ணயிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் ராகுலுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் தரிசனத்துக்காக 2024 ஜனவரி 1 இல் திறக்கப்படும் என்பதுதான் என்றார்.

இதனிடையே உத்தரகண்ட் மாநிலம், ஷாம்பூரில் உள்ள காங்டி கிராமத்தில் தொண்டர்களிடம் பேசிய விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவரும் அந்த ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத்தின் நிறுவனருமான பிரவீண் தொகாடியா, அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டும் பணிக்கு ஏதோ தாங்கள்தான் காரணம் என்பதுபோல் மோடி அரசும், பா.ஜ.க.வினரும் பேசி வருகின்றனர். ராமர் ஆலயம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களுக்கும் இதில் பங்கு உள்ளது.

அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று ராம பக்தர்கள் ஓர் இயக்கமாக 1980 மற்றும் 1990-களிலிருந்தே போராடி வந்தனர். இந்த நிலையில் ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் துரிதமாக விசாரணை நடத்தி சாதகமான தீர்ப்பு அளித்ததை அடுத்து ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் துரிதமாக தீர்ப்பு கிடைக்கவும் தாங்கள்தான் காரணம் என்பது போலவும் ராமர் ஆலயம் கட்டப்படுவதும் தங்கள் முயற்சியால்தான் என்பது போலவும் பா.ஜ.க.வும் மோடி அரசும் பேசிவருகின்றனர். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முயல்கின்றனர் என்று தொகாடியா கூறினார்.

இதனிடையே தொகாடியாவின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் சந்தீப் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பா.ஜ.க.வுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

துறவிகள், பா.ஜ.க., விசுவ ஹிந்து பரிஷத், ராம பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ராமர் ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டு இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில்தான் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டும் பணியை அரசியலாக்கி ஆதாயம் தேடும் பா.ஜ.க.வின் மறைமுக திட்டத்தை சரியான நேரத்தில் தொகாடியா வெளிப்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் தீரேந்திர பிரதாப் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com