'இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஷிண்டே' : சிவசேனை விளம்பரத்தால் பரபரப்பு!

'இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஷிண்டே' : சிவசேனை விளம்பரத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி, பல்வேறு பத்திரிகைகளில் செவ்வாய்க்கிழமை முழுபக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஷிண்டே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பதவிக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸைவிட ஷிண்டேதான் விரும்பத்தக்கவர் என்று ஆய்வில் வெளியான தகவலையும் வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்வையிட்ட உத்தவ் பிரிவு சிவசேனை தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத், நரேந்திர மோடி-அமித்ஷா சிவசேனை என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தில் சிவசேனையின் வில்-அம்பு சின்னமும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஷிண்டேயின் படமும் வெளியாகியுள்ளது. ஆனால், சிவசேனை நிறுவனத் தலைவர் மறைந்த பால்தாக்கரேயின் படம் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 26.1 சதவீத மக்கள் ஏக்நாத் ஷிண்டேதான் மகாராஷ்டிர முதல்வராக வரவேண்டும் என்றும், 23.2 சதவீதம்

பேர் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்தான் வர வேண்டும் என்று கருத்துத்து தெரிவித்திருந்ததாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் 49.3 சதவீத மக்கள் மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க. – சிவசேனை கூட்டணியை விரும்புவது தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விளம்பரம் பற்றி பா.ஜ.க. மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே கருத்து தெரிவிக்கையில், மக்கள் எந்த கட்சியை அல்லது எந்த தலைவரை விரும்புகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்று கூறினார். கேபினட் அமைச்சராக இருந்த ஷிண்டே இப்போது முதல்வராக இருக்கிறார். மக்கள் பட்னவிஸ், ஷிண்டே மற்றும் பிரதமர் மோடியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.

மாநிலத் தலைவர் என்ற முறையில் மகாராஷ்டிர மக்கள் பட்னவிஸை இரண்டு முறை ஆதரித்து வந்துள்ளனர். சிவசேனையா அல்லது பா.ஜ.க.வா? எது பெரிய கட்சி, எது சிறிய கட்சி என்கிற ஒப்பீடு இப்போதைக்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அதுல் லோந்தே கூறுகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு போலியானது, ஷிண்டே தன்னை முன்னிருத்திக் கொள்ள செய்த ஆய்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

மகா விகாஸ் அகாதி, மக்களவைத் தேர்தலில் 42 இடங்களையும், சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களையும் வெல்வது உறுதி. அப்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார் என்று வரலாறு சொல்லும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. மகா விகாஸ் அகாதியில் உத்தவ் தலைமையிலான சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com