டிசம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்:பிரதமர் மோடி

Prime Minister Modi's request For UPI Payment.
Prime Minister Modi's request For UPI Payment.
Updated on

டிசம்பர் மாதத்தில் நீங்கள் எங்கு என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு யுபிஐ பரிவர்த்தனை மட்டுமே மேற்கொண்டு அந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், ‘மன் கீ பாத்’ என்னும் நிகழ்ச்சி வாயிலாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக மக்களிடம் உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியில் குறிப்பாக நாட்டின் வளர்ச்சி பற்றியும் அதற்காக பாடுபடும் நபர்களைப் பற்றியும் பாராட்டும் விதமாக பேசுவார்.

இந்நிலையில் சமீபத்தில் 107வது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா மற்றும் யுபிஐ பரிவர்த்தனை பற்றி அதிகம் பேசினார். அப்போது இந்த டிசம்பர் முழுவதும் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யுங்கள் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: “இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மாதமும் UPI பணப்பரிவர்தனை அதிகரித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்காக மக்கள் இந்த மாதம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தி, அதில் கிடைக்கும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தீபாவளிக்கு மக்கள், கையில் பணம் வைத்து செலவழிப்பதை விட யுபிஐ பரிவர்த்தனை அதிகம் மேற்கொண்டுள்ளனர். 

இதன் மூலமாக மக்கள் தற்போது டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனையை அதிகம் நம்புகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனவே இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த மாதம் முழுவதும் ஒவ்வொருவரும் யுபிஐ மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்வோம். வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார். 

logo
Kalki Online
kalkionline.com