அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?

மிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக ஆட்சியில் இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாக பணப் பறிமாற்றம் செய்ததாக இவர் மீது அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த மூன்று வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு சம்பந்தமாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அனைவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதம் செய்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து பல்வேறு தகவல்களை கூறினார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினைக் கொடுத்தால், செந்தில் பாலாஜிக்கு உடனடியாக எந்த சிக்கலும் ஏற்படாது. மேலும், இந்த வழக்கு சில மாதங்களுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு நீண்டு செல்லும். அதேபோல், இரண்டு நீதிபதிகளும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தாலும் அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படாது.

ஆனால், இரண்டு நீதிபதிகளும் அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீண்டும் ரத்து செய்து தீர்ப்பு அளித்தால், செந்தில் பாலாஜிக்கு சிக்கல்தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே இந்தத் தீர்ப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமின்றி, ஒட்டுமொத்த திமுகவினரே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com