
தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளை கண்காணிக்க 10 கிலோமீட்டர் இடைவெளியில் அதிநவீன கேமராக்களை பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், வாகனம் ஓட்டிகளினுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான நிதிகள் ஒடுக்கப்பட்டு நாடு முழுவதும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அதிநவீன வி ஐ டி இ எஸ் கேமராவை பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த வி ஐ டி எஸ் கேமராக்களை அகற்றிவிட்டு புதிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்வது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, கால்நடைகள் நடமாட்டம் உள்ளிட்ட 14 வகையான நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது. விதி மீறல்கள் நடைபெற்ற உடனே அருகில் இருக்கக்கூடிய ரோந்து வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உஷார் படுத்தப்படும். மேலும் இணைய வழியாக அபராதம் விதிக்கவும் இந்த அதிநவீன கேமராவால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையினுடைய பாதுகாப்பு மேலும் பலப்படும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்.