பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலந்தாய்வுக் கூட்டம்!

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலந்தாய்வுக் கூட்டம்!
KAMALAKANNAN
Published on

ருவ மழையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் பாலப்பணிகள் அனைத்தும், மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்துக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் மாதத்தை பாலம் பராமரிப்பு மாதமாகக் கொண்டு, பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் உடனே அதை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவுநீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை, மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், சாலைகளைத் தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட சாலைகளில் தோண்டும் பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு செய்து முடிக்க வேண்டும் என்றும் பொறியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் காய்ந்து உடையும் நிலையில் உள்ள கிளைகளை உடனே அகற்ற வேண்டும் எனவும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உயர்மட்ட புருவங்களை வெட்டுதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும் எனவும், மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தேவைகளின் அடிப்படையில், மணல் பைகள், பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளைத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும், மழை நீரால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு, முன்கூட்டியே சீரமைக்கத் தயாராக இருத்தல் , அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கத் தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, இராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை தினத்தந்தி அலுவலகம் முன்பு போன்ற இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில், அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், இந்த வருடம் நிரந்தர வெள்ள சீரமைப்புப் பணிகளுக்காக 46 பணிகளுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்துக்கும் உடனடியாக ஒப்பந்தம் கோரப்பட்டு, அனைத்து பணிகளும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

கொளப்பாக்கம் சாலை, அணை ஏரி போன்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் இந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வடிகால்களில், மண், குப்பைகள் போன்றவை வடிகால்களில் செல்லாத வகையில், ‘தடுப்பு வலைகள்’ விரைவாக அமைக்க வேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com