நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 – இல் தொடங்குகிறது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 – இல் தொடங்குகிறது!
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்குவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 2023 ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரின்போது கொண்டுவரப்பட உள்ள சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் ஆக்ஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை உள்ள 23 நாட்களில் 17 நாட்கள் நாடாளுமன்றம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் மழைக்கால கூட்டத்தொடராகும். இந்த கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்ட்டத்தில் தொடங்கி, பின்னர் புதிய நாடாளுமன்ற

கட்டடத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஆளும் கட்சி கூட்டணிகள் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதில் ஆர்வம் காட்டும் எனத் தெரிகிறது. அதேபோல தில்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com