விண்வெளியில் அதிகமாகும் குப்பைகள்: NASA எச்சரிக்கை!

விண்வெளியில் அதிகமாகும் குப்பைகள்: NASA எச்சரிக்கை!
Published on

விண்வெளியில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட குப்பைகள் இருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் விண்வெளியில் சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பூமியில் மேற்பரப்பில்தான் உலகிலுள்ள பல்வேறு நாடுகள் அனுப்பும் செயற்கைக்கோள்களும் இயங்கி வருகிறது. இன்று இருக்கும் பெரும்பாலான தொழில் நுட்பங்கள் அனைத்துமே மனிதர்களுடைய தேவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதளம் என நம்மைச்சுற்றி எல்லா விதமான தொழில்நுட்பங்களும் இருக்கும் வகையில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். 

வானிலைத் தகவல்கள், வணிகத்துறை, புவிசார் மாற்றங்கள், வங்கிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் எளிதாக இணையம் வழியாக பெறுவதற்கு, செயற்கைக்கோள்கள்தான் பயன் படுத்தப்படுகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் ஆயுட்காலம் என்பது இருக்கிறது. ஒரு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்த பிறகு, அதற்கு மாற்றாக மற்றொரு புனித செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே செயலற்று சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றைத்தான் விண்வெளி குப்பைகள் என்று அழைப்பார்கள். 

சமீபத்தில் நாசா தரப்பில் செய்யப்பட்ட ஆய்வில், விண்வெளியைச் சுற்றி சுமார் 20,000 குப்பைகள் தற்போது இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் பூமிக்கு மேற்புறத்தில் சுற்றி வருவதால் பூமிக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக புதியதாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களோடு, மேலே இருக்கும் விண்வெளி குப்பைகள் மோதி விபத்தை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.   

இந்த வருடம் மட்டுமே, ஸ்பேஸ் X நிறுவனத்தின் 3500 செயற்கைக்கோள்கள், ஸ்டார் லிங்க்-ன் 12000 செயற்கைக்கோள்கள், ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைக்கோள்கள், அமேசான் கியூபர் ப்ராஜெக்டின் 3736 செயற்கைக்கோள்கள் என சராசரியாக 20000 செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்வெளியில் 9000 செயற்கைக்கோள்கள் செயலில் இருப்பதாகவும், இதுவே 2030ல் 60000 செயற்கைக்கோளாக அதிகரிக்கும் எனவும் பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் புதிய விண்வெளி விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும், அல்லது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும்படி உருவாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சமீபத்தில் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆர்க்கிமிடிஸ் 1 என்ற விண்கலம் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது. 

எனவே, இனிவரும் காலங்களில் விண்வெளி குப்பைகளால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com