ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்பா? நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்; அதிரடி காட்டிய தமிழ்நாடு மின்சார வாரியம்

ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்பா? நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்; அதிரடி காட்டிய தமிழ்நாடு மின்சார வாரியம்

மின் இணைப்பு கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த காரணத்தால் இசேவை மையத்திற்கு முன்னர் மக்கள் குவிந்தார்கள். குறித்த காலத்திற்குள் இணைக்க முடியாத காரணத்தால் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்டும் ஆதார் எண்ணை இணைக்க மக்கள் தயங்கினார்கள்.

இணைக்காவிட்டால், மானியம் பாதிக்கப்படுமா? ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகளை கொண்டிருக்கும் குடியிருப்புகளுக்கு தடை ஏற்படுமா? வீட்டின் உரிமையாளர் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டால் என்ன பாதிப்பு? என்று எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு மின்சார வாரியம் சரியான விளக்கம் தரவில்லை. இவையெல்லாம் மின்சாரக் கட்டண மானியத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்பதை நிறைய பேர் புரிந்து கொண்டார்கள்.

99 சதவீத மின் இணைப்புகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்பை வைத்திருப்பதாகக் கூறி மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி, இணையத்தில் வைரலானது. இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பதோடு சம்பந்தப்பட்ட அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்திருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது,

பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்பு இருப்பதால் இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். பல வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருப்பதால் 100 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இல்லாத அளவுக்கு சமாளிக்கப்படுகிறது. இதையெல்லாம் கண்டுபிடித்து, கூடுதல் இணைப்புகளை நீக்கவேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு வீடு அல்லது குடியிருப்பு அல்லது இடத்தில் ஒரு மின்சார இணைப்பு மட்டும் தான் தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை ஒரே இணைப்பாக கருதப்படவேண்டும். இந்த இணைப்பிற்கு நுகர்வோர் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்களது மின்சார இணைப்புகளை கட்டண விகித பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்.

தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இனி தனி இணைப்பு தரப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சொல்லும் அனைத்தையும் கடந்த காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமலுக்கு கொண்டு வந்ததில்லை.

ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவருதாக செய்திகள் வந்தன. அப்படியொரு திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மறுத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com